என் தந்தை விட்டு சென்ற பணியை தொடர வாய்ப்பு தாருங்கள் கை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு வேட்பாளர் விஜய்வசந்த் பிரசாரம்
என் தந்தை விட்டு சென்ற பணியை தொடர, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கன்னியாகுமரி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் பிரசாரம் செய்தார்.
கருங்கல்,
கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். அவர் நேற்று கிள்ளியூர் சட்ட மன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமாருடன் கருங்கல் சந்தை பகுதிக்குள் வியாபாரிகளிடம் வாக்குகளை சேகரித்து விட்டு அங்கிருந்து வாகன பிரசாரத்தை தொடங்கினார்.
இந்த வாகன பிரசாரத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின் தொடங்கி வைத்தார். என் தந்தை பணி வாகன பிரசார தொடக்கத்தில் விஜய் வசந்த் பேசும் போது கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக ஆண்ட ஆட்சி மக்களுக்கு விரோதமான ஆட்சியாக இருந்து வந்தது. என் தந்தை 2019 தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகி கன்னியாகுமரி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என சபதம் கொண்டு நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து கொண்டு இருக்கும் போதே கொரோனா என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
என் தந்தை விட்டு சென்ற பணியை தொடரவும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று உருக்கமாக கூறினார்.
ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பேசும் போது, உங்களுடைய வாக்குகள் என்பது விலைமதிக்க முடியாதது. கடந்த வருடம் மார்ச் 22-ந் தேதி நமது பிரதமர் மோடி கொரோனா என்கின்ற அந்த நோய் தொற்றினால் பொது முடக்கத்தை அறிவித்தார்கள். ஆனால் இன்றைக்கு ஒரு வருடம் ஆகிவிட்டது. பொது முடக்கத்தால் இங்கு இருக்கின்ற காய்கறி, மீன் வியாபாரி, சிறு, குறு தொழில் செய்பவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலை எதற்காக வந்தது என்று சொன்னால் மத்தியிலே இருக்கிற மோடி அரசாங்கமும், அவர்கள் சொல்வதற்கு எல்லாம் கூஜா தூக்குகின்ற தமிழக அரசாங்கமுமே தான். ஆகவே இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்கான வேளை இன்றைக்கு வந்திருக்கிறது. எனவே ஏப்ரல் 6-ந் தேதியன்று இங்கு இருக்கின்ற மக்களாகிய நீங்கள் அனைவரும் சிந்தித்து கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
கருங்கலில் தொடங்கிய பிரசாரம் திக்கணங்கோடு, வெள்ளியாவிளை, ஆலஞ்சி, மங்கல குன்று, பூட்டேற்றி, எட்டணி, வட்டக்கோட்டை, தொலையாவட்டம், மாங்கரை வழியாக புதுக்கடையில் நிறைவடைந்தது. வழிநெடுக வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.