கோவையில் ரேஷன் அரிசி, பணம் பறிமுதல்
கோவையில் பறக்கும் படையினரின் அதிரடி சோதனையில் ரேஷன் அரிசி, பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன
கோவை,
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பறக்கும் படை அதிகாரி பாரதி தலைமையில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை நடத்தினார்கள். அந்த வாகனத்தில் 50 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக சங்கம் காந்திநகரை சேர்ந்த தாமஸ், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் ஆகியோர் பிடிபட்டனர். விசாரணையில் கோவை மசக்காளிப்பாளையத்தில் உள்ள ஒரு கடையில் இருந்து ரேஷன் அரிசி வாங்கியதாக தெரியவந்துள்ளது. பின்னர் இந்த வழக்கு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.
மேலும், கோவை அய்யப்பன் கோவில் வீதியில் நேற்று பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் வால்பாறையை சேர்ந்த மைக்கேல் ராஜ் என்பவர் ஓட்டி வந்த காரை சோதனை செய்த போது அதில் அரசியல் கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை பீளமேடு மணியம்பாப்புசாமி வீதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினார்கள். இதில் பீளமேடு பகுதியை சேர்ந்த சுனில்குமார் என்பவர் வந்த காரில் இருந்த ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.98 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.
கோவை வெறைட்டிஹால் ரோடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னையராஜபுரம் சவுடேஸ்வரி கோவில் அருகில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினார்கள். இதில் சபேசன் என்பவர் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.4 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.