ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா வங்கி மூடல்

கோவையில் ஊழியர்கள் 3பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வங்கி மூடப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.8½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-03-24 13:39 GMT
கொரோனா
கோவை,

கோவையில் இந்த மாதம் தொடக்கம் முதல் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 75 சதவீதம் மாநகராட்சி பகுதியில் வசிக்கின்றனர். 

இதனால் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் தீவிரமாக விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரியும் 3 ஊழியர்களுக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த வங்கி மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக வங்கிக்கு பணம் எடுக்க வந்தவர்கள் குறித்த விவரங்களை சுகாதார துறையினர் சேகரித்து வருகின்றனர். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து சுகாதார துறை அதிகாரி கூறியதாவது.

மாநகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒரு வீட்டில் 3 பேர் அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்த வீதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. 

கோவை வடக்கு மண்டலத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு திருவாசகம் வீதி, விநாயகா கார்டன், நேரு நகர், காந்திமாநகர், ஜெயின் நகர் ஆகிய 5 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்ட உள்ளது. 

தெற்கு மற்றும் மேற்கு மண்டலத்தில் கட்டுப்பாட்டு பகுதிகள் எதுவும் இல்லை. கிழக்கு மண்டலத்தில் 4 வீதிகளும், மத்திய மண்டலத்தில் ஒரு வீதியும் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் கொரோனா பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக கடந்த 9-ந் தேதி முதல் முகக்கவசம் அணியாவர்கள் மற்றும் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காத நிறுவனங்கள், கடைகளுக்கு அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக கடந்த 19-ந் தேதி முகக்கவசம் அணியாத 427 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. 

கடந்த 1-ந் தேதி முதல் தற்போது வரை முகக்கவசம் அணியாதவர்கள், விதிமுறைகளை முறையாக பின்பற்றாத நிறுவனங்கள் என மொத்தம் ரூ.8 லட்சத்து 58 ஆயிரத்து 250 அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.

தொற்றை கட்டுப்படுத்த மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்