பாபநாசம் தொகுதி தி.மு.க. கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: தி.மு.க. அரசால்தான், தமிழக மக்களுக்கு நல்லாட்சியை தர முடியும் வேட்பாளர், ஜவாஹிருல்லா பேச்சு
தி.மு.க. அரசால்தான், தமிழக மக்களுக்கு நல்லாட்சியை தர முடியும் என்று பாபநாசம் தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், வேட்பாளர் ஜவாஹிருல்லா கூறினார்.
பாபநாசம்,
பாபநாசம் சட்டசபை தொகுதி தி.மு.க. கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாபநாசத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் மு.சண்முகம், செ.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாபநாசம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் கே.வி.கலைச்செல்வன் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், பாபநாசம் சட்டசபை தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளருமான ஜவாஹிருல்லா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தான் ஒரு விவசாயி என்றும், விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருவதாகவும் பேசி வருகிறார். உண்மையிலேயே விவசாயிகளின் வாழ்வுரிமையை குழிதோண்டி புதைத்த அரசு அ.தி.மு.க. அரசு. மத்தியில் ஆளும் பா.ஜனதாக அரசு மாநில உரிமைகளை பறித்து 3 வேளாண் சட்டங்களை இயற்றி உள்ளது மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசுக்கு ஆதரவாக இருக்கும் அ.தி.மு.க. அரசை அகற்ற வேண்டும். தமிழ்நாட்டில் தாமரை மலராது. இரட்டை இலையும் உதிர்ந்து போகும். சூரியன் மட்டும்தான் வெளிச்சத்தை தரும். தி.மு.க. அரசால் தான் மக்களுக்கு நல்லாட்சி தர முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லோகநாதன், திராவிடர் கழக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் துரைராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாரதி ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் உறவழகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜகான், மனிதநேய மக்கள் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் தஞ்சை பாதுஷா, தமிழக வாழ்வுரிமை கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் செல்வம், மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ரஹமத் அலி, மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தாமரைச்செல்வன், என்.நாசர், இரா.அசோக்குமார், தியாக சுரேஷ்குமார், பி.எஸ்.குமார், பேரூர் செயலாளர்கள் துளசி அய்யா, சீனிவாசன் .சரவணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன் நன்றி கூறினார்.