சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி - 2-வது முறையாக பாதிப்பு

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 2-வது முறையாக பாதிப்புக்குள்ளாகி உள்ளார்.

Update: 2021-03-24 06:40 GMT
சோழிங்கநல்லூர்,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதில்லை என்று கூறப்படுகிறது. பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்களும் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

கடந்த 21-ந்தேதி கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் பிரசாரத்தில் ஈடுபட்ட சோழிங்கநல்லூர் தொகுதி தற்போதைய எம்.எல்.ஏ.வும் தி.மு.க. வேட்பாளருமான அரவிந்த் ரமேஷ் சோர்வாக காணப்பட்டார்.

இதையடுத்து அன்றையதினம் துரைப்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிக்க இருந்த அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி கொரோனா பாதிப்பு இருந்தது. இதையடுத்து அவர் 15 நாட்கள் தன்னை தனிமைப்படுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது. வேட்பாளர் அரவிந்த் ரமேஷ்க்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவரது குடும்பத்தினர், அவருடன் பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் கொரோனவால் பாதிக்கப்பட்டிருப்பது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சோர்வடைய செய்துள்ளது.

மேலும் செய்திகள்