மழை மற்றும் குளிர் காலங்களில் மல்லிகை உற்பத்தியை பெருக்க வெப்பமூட்டி குடில் அமைக்கப்படும் - ஸ்ரீரங்கம் அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் வாக்குறுதி
மழை மற்றும் குளிர் காலங்களில் மல்லிகை உற்பத்தியை பெருக்க வெப்பமூட்டி குடில் அமைக்கப்படும் என்று ஸ்ரீரங்கம் அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் வாக்குறுதி அளித்தார்.
ஜீயபுரம்,
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் கடும் வெயிலில் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். நேற்று காலை அந்தநல்லூர் ஒன்றியத்தில் உள்ள போதாவூர், மூலங்குடி, பேரூர், சீராத்தோப்பு, மல்லியம்பத்து உள்ளிட்ட பல பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். கீரிக்கல்மேடு பகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி, போதாவூர் சென்றபோது ஏராளமான பெண்கள் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம், அதிமுக அரசு செய்துள்ள சாதனைகளை விளக்கி கூறி வாக்கு சேகரித்தார். அதைத்தொடர்ந்து இனாம்புலியூர் ஊராட்சிக்கு சென்று அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு சென்றபோது, அந்த வழியில் உள்ள மல்லிகை தோட்டத்தில் தொழிலாளர்கள் பூ பறித்துக்கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று கலந்துரையாடிய கு.ப.கிருஷ்ணன், அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, மழை மற்றும் குளிர் காலங்களில் மல்லிகை பூ உற்பத்தியை பெருக்க வெப்பமூட்டி குடில் அமைக்கப்படும்.
மேலும் அயல்நாடுகளில் இருந்து எந்திரம் இறக்குமதி செய்து, பூ கட்டுவதற்கு வழிவகை செய்து தரப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதனை தொடர்ந்து வியாழன்மேடு, எட்டரை, கோப்பு, குழுமணி உள்பட பல்வேறு இடங்களுக்கு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.
பின்னர் 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக மாற்றி தருவோம், குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1500 வங்கி கணக்கில் செலுத்துவோம், ஆண்டுக்கு 6 சமையல் கியாஸ் சிலிண்டர் இலவசம் உள்பட அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி அந்தநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது ஒன்றிய செயலாளர்கள் அழகேசன், நடராஜ் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.