கரூர் நகரின் ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு விசைத்தறி பூங்கா அமைக்க நடவடிக்கை - வி.செந்தில்பாலாஜி உறுதி
வாக்கு சேகரிப்பின்போது கரூர் நகரின் ஜவுளித் தொழில் வளர்ச்சிக்காக விசைத்தறி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என வி.செந்தில் பாலாஜி வாக்குறுதி அளித்தார்.;
க.பரமத்தி,
கரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில் பாலாஜி கரூர் மத்திய நகரத்திற்கு உட்பட்ட கோபாலபுரம், சன்னதி தெரு, அன்சாரி தெரு, நீலிமேடு, ஆதி விநாயகர் கோவில் தெரு மற்றும் வாங்கல்-குப்புச்சிபாளையம் பகுதியில் கோட்டைமேடு, திருவள்ளுவர் நகர், ஓடையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பட்டாசு வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும், ஆண்கள் மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
கரூர் நகரின் ஜவுளித் தொழில் வளர்ச்சிக்காக விசைத்தறி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கரூர் நகர டெக்ஸ்டைல் உற்பத்தியாளர்கள், உள்நாட்டு வியாபாரம் மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில், டெக்ஸ்டைல் கண்காட்சிகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் நடத்த, கரூர் நகருக்குள் கரூர் டெக்ஸ்டைல் சென்டர் அமைத்து தரப்படும். தங்களது ஜவுளி பொருட்களின் தரத்தை சுய திருப்திக்காக பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ள, டெஸ்டிங் லேப் அமைத்து தரப்படும்.
மேலும் கரூர் டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை, பஸ் பாடி ஆகியவற்றில் பணி புரியும் வெளிமாவட்ட பெண்கள் தங்கும் வகையில் கரூரில் மகளிர் தங்கும் விடுதி அமைத்து தரப்படும். ஆகவே, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவதற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். எனது வாழ்நாளை கரூர் தொகுதி மக்களுக்காக அர்ப்பணிப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.