எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: அரவக்குறிச்சி தொகுதியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வேன் - பா.ஜ.க. வேட்பாளர் கே.அண்ணாமலை வாக்குறுதி

எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். அரவக்குறிச்சி தொகுதியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வேன் என்று தேர்தல் பிரசாரத்தின்போது பா.ஜ.க. வேட்பாளர் கே.அண்ணாமலை வாக்குறுதி அளித்தார்.

Update: 2021-03-24 04:06 GMT
அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி பா.ஜ.க. வேட்பாளர் கே. அண்ணாமலை க.பரமத்தி வடக்கு ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் வாக்காளர்கள் மத்தியில் பேசியதாவது:- தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் மிகப் பெரிய மெஜாரிட்டியுடன் வெற்றி பெறுவார்கள். இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சர் ஆவது உறுதி. அந்த அளவிற்கு ஏழை எளிய மக்களுக்கு பல நல்ல திட்டங்களை தீட்டி செயல்படுத்திக் காட்டி அனைத்து மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார். நீங்கள் தாமரைக்கு செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் இரட்டை இலைக்கு செலுத்தும் வாக்காகும். கரூர் தொகுதியில் 'சீட்' கிடைக்காமல் அரவக்குறிச்சியில் நின்று வெற்றி பெற்று மக்களுக்கு எதுவுமே செய்யாமல் தற்போது கரூர் தொகுதிக்கு சென்று விட்டனர். இதனால், அரவக்குறிச்சி தொகுதி வளர்ச்சியில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை. எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு தாருங்கள். அரவக்குறிச்சி தொகுதியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வேன். எனவே எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்