கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் 13 மினி கிளினிக்குகள்: அ.தி.மு.க. அரசின் திட்டங்களை பட்டியலிட்டு தளவாய்சுந்தரம் தீவிர பிரசாரம்
கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் 13 மினி கிளினிக்குகள் கொண்டு வரப்பட்டுள்ளன என அ.தி.மு.க. அரசின் திட்டங்களை பட்டியலிட்டு தளவாய்சுந்தரம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர், வீதி வீதியாக சென்று இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார்.
நாகர்கோவில்,
கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் தளவாய்சுந்தரம் பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். இவர் நேற்று இறச்சகுளம் பகுதியில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
தொடர்ந்து தாழக்குடி பேரூராட்சியில் வீரநாரணயமங்கலம், கண்டமேட்டுக்காலனி, திருப்பதிசாரம் கீழுர், திருப்பதிசாரம் மேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஜீப்பிலும், வீதி வீதியாக நடந்து சென்றும் வாக்குகளை சேகரித்தார்.
முன்னதாக அவர் இறச்சகுளத்தில் பேசும் போது, ‘தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் சாதாரண ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்கள் நலனில் அக்கறை கொண்டு இந்த தேர்தல் அறிக்கையில் பல திட்டங்களை தந்திருக்கிறார். ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம் மற்றும் மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்களால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள் மிகவும் பயன் அடைவார்கள். அவர்களின் நலனில் அக்கறை கொண்டு இன்னும் பல அதிரடி திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தும். எனவே நடைபெற உள்ள சட்டசபை மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்’’ என்றார்.
இதே போல தெள்ளாந்தி சந்திப்பில் பேசியபோது, ‘முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏழை எளிய மக்களின் நலன் கருதி அம்மா மினி கிளினிக் திட்டத்தை கொண்டு வந்தார். அந்த திட்டத்தின் மூலம் என்னுடைய முயற்சியின் பயனாக கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் மட்டும் 13 மினி கிளினிக்குகள் கொண்டு வரப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர ஜெயலலிதா ஆட்சியில் பெண்கள் பயன் அடையும் வகையில் மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம், மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம், ஆடு மற்றும் மாடு வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டங்கள் தொடர எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன் என்றார்.