பணம் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க ரெயிலில் போலீசார் தீவிர சோதனை
பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க ரெயிலில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
பொள்ளாச்சி,
தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவின் பேரில் பொள்ளாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் வைரம், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்குமார் மற்றும் ரெயில்வே போலீசார் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு மதுரையில் இருந்து திருவனந்தபுரம் செல்ல ரெயில் வந்தது. அந்த ரெயிலில் ஏறிய போலீசார் அங்கு இருந்த பயணிகளிடம் சோதனை செய்தனர்.
அத்துடன் ரெயிலைவிட்டு இறங்கியவர்கள் வைத்திருந்த பைகளிலும் சோதனை நடத்தப் பட்டது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் ரெயிலில் பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்று சோதனை செய்யப்பட்டது.
தேர்தல் விதிமுறைகளை மீறி பணம், பரிசு பொருட்கள் கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.