தமிழகத்தின் உரிமைகளை மீட்க தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பிரசாரம்

தமிழகத்தின் உரிமைகளை மீட்க தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

Update: 2021-03-24 00:59 GMT
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை (தனி) தொகுதியில் ேபாட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று இரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று இங்கு கூடி உள்ளீர்கள். அனைத்து தரப்பு மக்களும் ஆட்சி மாற்றம் வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இந்த ஆட்சியை மாற்றி புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக நாம் இன்று மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கி உள்ளோம். நமது கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி.

விலைவாசி இப்போது போல இதற்கு முன்பு எப்போதும் உயர்ந்தது இல்லை. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகமாக உயர்ந்துள்ளதே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம். மன்மோகன்சிங் ஆட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.70-க்கு கொடுத்தார். இப்போது மோடி ரூ.100-க்கு கொடுக்கிறார். மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது சமையல் எரிவாயு விலை ரூ.400 ஆக இருந்தது. இன்று ரூ.800 ஆக உயர்ந்துள்ளது.
இன்று எல்லோரும் இருசக்கர வாகனம், கியாஸ் சிலிண்டர் பயன்படுத்துகிறோம். இப்படி விலைவாசி உயர்ந்தால் சாதாரண ஏழை, நடுத்தர மக்களின் நிலை என்னவாகும். கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. மோடி அரசால் விலைவாசியை குறைக்க முடியவில்லை. 500, 1,000 ரூபாய் செல்லாது என மோடி அறிவித்தார். 

இதனால் என்ன லாபம் பிறந்தது. இந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. மாறாக மக்கள் கஷ்டப்பட்டது தான் மிச்சம். ஏழை, எளிய மக்களின் பிரச்சினைகள் காங்கிரஸ் ஆட்சியில் பிரதான பிரச்சினைகளாக எடுத்துக் கொள்ளப்பட்டன.
மோடி அரசாங்கத்தால் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வந்ததை போல திட்டங்கள் கொண்டு வர முடியுமா?. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பொருளாதார கொள்கையை சிறப்பாக கையாண்டார்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் படிப்படியாக உயர்ந்து இன்று கட்சியின் தலைவர் என்ற உயர்ந்த நிலைக்கு வந்துள்ளார். தமிழகத்தில் புதிய ஆட்சியை கொண்டு வர அனைவரும் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

அ.தி.மு.க. ஒரு ஊழல் அரசாங்கம். இதுவரை இது போன்ற ஒரு ஊழல் அரசு ஆட்சியில் இருந்தது இல்லை. எடப்பாடி தவறான வகையில் இந்த ஆட்சியை பிடித்துள்ளார். ஆட்சி மாற்றத்தை நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். தமிழகத்தின் உரிமைகளை மீட்க, புதிய ஆட்சி அமைய, தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

மத்திய பா.ஜனதா ஆட்சியிலும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியிலும் விவசாயிகள் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், விவசாயிகளின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்