வால்பாறையில் வியாபாரியிடம் ரூ.95 ஆயிரம் பறிமுதல்

வால்பாறையில் வியாபாரியிடம் ரூ.95 ஆயிரத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-03-24 00:18 GMT
வால்பாறை,

கோவை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு கொடுப்பதை தடுக்க பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி இதுவரை ரூ.2 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பறக்கும்படையினர் அதிகாரி லதா தலைமையில் வால்பாறை- பொள்ளாச்சி சாலை அட்டக்கட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

 அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காருக்குள் ரூ.95 ஆயிரம் இருந்தது. அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. உடனே அதிகாரிகள் காருக்குள் இருந்தவரிடம் விசாரணை செய்தனர்.

அதில் அவர், வால்பாறையை சேர்ந்த சாஜூ என்பதும், மளிகை வியாபாரம் செய்து வருவதும், தனது கடைக்கு பொருட்கள் வாங்க பொள்ளாச்சி செல்வதாகவும் தெரிவித்தார். 

ஆனால் அந்த பணத்துக்கு ஆவணங்கள் இல்லை என்பதால் ரூ.95 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்