நாயக்கன்சோலையில் 3 ஆடுகளை கடித்துக்கொன்ற செந்நாய்கள்
நாயக்கன்சோலையில் 3 ஆடுகளை செந்நாய்கள் கடித்துக்கொன்றது.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே உள்ள நாயக்கன்சோலை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து செந்நாய்கள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கால்நடைகளை கடித்து கொன்று அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் தொடர்ந்து பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
நாயக்கன்சேலையில் நேற்று முன்தினம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த செந்நாய்கள் தியாகராஜ் என்பவரின் 4 ஆடுகளை கடித்து கொன்றது. இதற்கிடையில், நேற்று அதிகாலை ஊருக்குள் செந்நாய்கள் புகுந்தன.
அப்போது விஜயசுந்தரம் என்பவரின் வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்த 3 ஆடுகளை செந்நாய்கள் கடித்துக்கொன்றன. ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த விஜயசுந்தரம் வெளியே வந்தபோது 3 ஆடுகள் இறந்து கிடந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனவர் சசிகுமார், வனகாப்பாளர் ஜெயக்குமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், செந்நாய்கள் தொடர் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே செந்நாய்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.