காசநோய் தினத்தையொட்டி முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு
காசநோய் தினத்தையொட்டி முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஊட்டி,
ஆண்டுதோறும் மார்ச் 24-ந் தேதி உலக காசநோய் தினமாக கடைப்பிடிக்க படுகிறது. இருமல், பசியின்மை, எடை குறைவு, மாலை நேரக் காய்ச்சல், இரவில் வியர்த்தல், நெஞ்சு வலி போன்றவை காசநோய் அறிகுறிகளாகும்.
கடந்த சில ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய, மாநில அரசுகள் காசநோய் தொற்று இல்லாத மாவட்டமாக நீலகிரியை அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் மாவட்ட காசநோய் மையம் சார்பில், உலக காசநோய் தினத்தை ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் மற்றும் காசநோய் தடுப்பு பணியாளர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு முககவசங்களை வழங்கினர்.
அதில் காசநோய் இல்லாத நீலகிரி மாவட்டம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. காசநோய் தொற்று கிருமி மூலம் பரவுவதால், முககவசம் சரியான விதத்தில் அணிந்தால் பரவாமல் தடுக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஊட்டியில் மினி பஸ், ஆட்டோ டிரைவர்கள், முன்கள பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.