மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி கவிழ்ந்தது

வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி கவிழ்ந்தது.;

Update: 2021-03-23 23:52 GMT
வால்பாறை,

மலைப்பகுதியான வால்பாறையில் பல்வேறு இடங்களில் கட்டிட பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக பொள்ளாச்சி, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து எம் சேன்ட் மணல் டிப்பர் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு வருகிறது. 

இதன் காரணமாக பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் டிப்பர் லாரிகள் அதிகளவில் சென்று வருகின்றன. இவ்வாறு தொடர்ந்து டிப்பர் லாரிகள் செல்வதால் மலைப்பாதையில் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு நேற்று காலையில் மணல் ஏற்றிக்கொண்டு ஒரு டிப்பர் லாரி சென்றது. அந்த லாரி அங்குள்ள அய்யர்பாடி எஸ்டேட் பகுதி அருகே வந்த போது  திடீரென்று டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் நடுரோட்டில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் லாரியில இருந்த மணல் அனைத்தும் நடுரோட்டில் கொட்டியது. இதனால் அந்த சாலை முழுவதும் மணல் பரவி கிடந்ததால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்தனர். 

இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த திருப்பூரை சேர்ந்த ரவிச்சந்திரனுக்கு (வயது 49) பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, மலைப்பாதையில் பழுதான வாகனங்களையும், அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வரும் வாகனங்களையும் அனுமதிக்க கூடாது. 

அவ்வாறு செய்வதால்தான் இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் என்றனர். 

மேலும் செய்திகள்