கோத்தகிரி அருகே ஆதிவாசி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இசை கலைஞர் கைது

கோத்தகிரி அருகே ஆதிவாசி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இசை கலைஞர் கைது செய்யப்பட்டார். சம்பள தகராறில் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2021-03-23 23:32 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மந்தரையை சேர்ந்தவர் மணி (வயது 66). இசை கலைஞர். ஆதிவாசியான இவர் அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் சேர்ந்து விஷேச வீடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். கடந்த 17-ந் தேதி சம்பள பணத்தை பிரிப்பது தொடர்பாக மணி மற்றும் மற்ற 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மணி இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது காப்பி தோட்டத்தில் பலத்த காயங்களுடன் மணி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். 

இதுகுறித்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், மணியுடன் இசை நிகழ்ச்சிக்கு சென்று வந்த குஞ்சபனையை சேர்ந்த இசை கலைஞர் சுப்ரமணி (வயது 65) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் போலீசார் சுப்ரமணி செல்போன் எண்ணை வைத்து அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் சுப்ரமணி நேற்று காலை அரவது வீட்டிற்கு வந்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோத்தகிரி போலீசார் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்ரமணியை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் சம்பளம் பிரிக்கும்போது தகராறு ஏற்பட்டதால், ஆத்திரத்தில் மணியை அடித்து கொலை செய்து, தூக்கில் தொங்க விட்டதை ஒப்புக்கொண்டார்.  

மேலும் போலீசாருக்கு பயந்து வனப்பகுதியில் தலைமறைவாக இருந்ததாகவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து சுப்ரமணியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைதான சுப்ரமணி ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்