சேலம் அருகே மாட்டு வியாபாரியிடம் ரூ.1½ லட்சம் பறிமுதல்
சேலம் அருகே மாட்டு வியாபாரியிடம் ரூ.1½ லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சேலம்:
ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாசிநாயக்கன்பட்டியில் சோதனைச்சாவடி அமைத்து நிலை கண்காணிப்பு குழு அலுவலர்கள் சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் கமலகண்ணன் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில், வாழப்பாடி ஆளூர்பட்டி வளையகாரனூரை சேர்ந்த மாட்டு வியாபாரி ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் வைத்திருப்பது தெரியவந்தது. ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை. மாடு வாங்குவதற்காக பணத்துடன் மினி லாரியில் செல்வதாக தெரிவித்தார். இருப்பினும் உரிய ஆவணம் இல்லாத காரணத்தால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஏற்காடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தனிடம் ஒப்படைத்தனர்.