அந்தியூர், பவானியில் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.1½ லட்சம் பறிமுதல்
அந்தியூர், பவானியில் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.1½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.
ஈரோடு
அந்தியூர், பவானியில் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.1½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.
வாகன சோதனை
தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்லும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. இதற்காக பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்திலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
அந்தியூர்
இந்தநிலையில் அந்தியூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி வீரக்குமார் தலைமையில் அதிகாரிகள் அந்தியூர் கிட்டம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள்.
அப்போது கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் இருந்து கொளத்தூர் நோக்கி ஒரு லாரி வந்துகொண்டு இருந்தது.
அதிகாரிகள் அந்த லாரியை நிறுத்தி, அதை ஓட்டிவந்த லக்கம்பட்டியை சேர்ந்த தேவராஜ் என்பவரிடம் சோதனை நடத்தினார்கள். அப்போது அவரிடம் ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல்
இதுபற்றி டிரைவர் தேவராஜ் கூறும்போது, சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியில் இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு சென்று கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் விற்பனை செய்துவிட்டு அதற்கான தொகையை கொண்டுவருவதாக கூறினார். ஆனால் அதற்கான ஆவணம் அவரிடம் இல்லை. இதனால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து அந்தியூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி இளங்கோவிடம் ஒப்படைத்தார்கள். உரிய ஆவணங்கள் கொடுத்து விட்டு பணத்தை பெற்றுச் செல்லுமாறு அவர் தேவராஜிடம் கூறினார்.
பவானி
இதேபோல் பவானி தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி குமரேசன் தலைமையில் அதிகாரிகள் பவானி அரசு ஆஸ்பத்திரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு ஆட்டோ வந்தது. அதிகாரிகள் வண்டியை நிறுத்தி அதை ஓட்டிவந்தரிடம் சோதனை செய்தபோது, அவரிடம் 63 ஆயிரத்து 100 ரூபாய் இருந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த சசிகாந்த் (வயது 27) என்பதும், அவரிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் தனிப்பிரிவு தாசில்தார் சரவணனிடம் ஒப்படைத்தார்கள். அவர் உரிய ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுச்செல்லுமாறு சசிகாந்திடம் தெரிவித்தார்.