தாளவாடி அருகே கொங்கஹள்ளி மல்லிகார்ஜூனா சுவாமி கோவில் குண்டம் விழா- ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டனர்
தாளவாடி அருகே கொங்கஹள்ளி மல்லிகார்ஜூனா சுவாமி கோவில் குண்டம் விழா நடைபெற்றது. இதில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.
தாளவாடி
தாளவாடி அருகே கொங்கஹள்ளி மல்லிகார்ஜூனா சுவாமி கோவில் குண்டம் விழா நடைபெற்றது. இதில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.
மல்லிகார்ஜூனா சுவாமி
தாளவாடி அடுத்துள்ள கொங்கஹள்ளி என்ற வனத்தில் 3 மலைகளுக்கு நடுவே பாறை குகையில் மல்லிகார்ஜூனா சுவாமி கோவில் அமைந்துள்ளது. லிங்காயத்து பழங்குடியின மக்களுக்கு சொந்தமான இக்கோவிலில் 18 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் சார்பில் குண்டம் விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு விழா நேற்று மாலை ருத்திராபிஷேக பூஜையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கிரிஜம்மன் நந்தவனத்தோப்பில் இருந்து மேள தாளத்துடன் சுவாமியின் ஆபரணங்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
பெண்கள் நுழைய கூடாது
இந்த கோவிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது என்பது மரபு. அதனால் பெண்கள் கோவிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திலேயே நின்று கொண்டார்கள்.
இந்தநிலையில் நேற்று பாறை குகையில் உள்ள சுயம்பு லிங்கத்துக்கு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டது. பிறகு கோவில் முன்பு குண்டம் அமைக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான ஆண்கள் கூடி நிற்க பூசாரி மட்டுமே குண்டம் இறங்கினார். பூசாரியை தவிர பக்தர்கள் எவரும் குண்டம் இறங்கக்கூடாது என்பது ஐதீகம். அதனால் ஆண் பக்தர்கள் குண்டத்தை தொட்டு வழிபட்டனர்.
முனிவர் வேடத்தில்...
அதன்பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புலி வாகனத்தில் மல்லிகார்ஜூனா சுவாமி முனிவர் வேடத்தில் திருவீதி உலாவந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டார்கள்.
பெண்கள் ஊருக்கு வெளியே உள்ள கிரிஜம்மா நந்தவனத்தோப்பில் இருந்து சாமியை தரிசனம் செய்தார்கள்.
சபரிமலைஅய்யப்பன் கோவிலில் கூட வயதான பெண்கள் வழிபட அனுமதி உள்ளது. ஆனால் இங்கு பெண்கள் முற்றிலும் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.