சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து கருப்பு கொடி
திருப்பூர் ராயபுரம் பகுதியில் சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து கருப்பு கொடி கட்டப்பட்டதால் பரபரப்பு;
திருப்பூர்
திருப்பூர் ராயபுரம் அணைமேடு பகுதியில் ஏராளமானவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். அங்கு 1000க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதி மக்களின் இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக கூறி அப்பகுதியினர் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், தங்கள் பகுதிக்கு குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறியும், தற்போது சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து அப்பகுதியில் கருப்பு கொடி கட்டி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், துண்டு பிரசுரம், சுவரொட்டி மூலம் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தும் வருகின்றனர். தங்களது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் வருகிற சட்டமன்ற தோ்தலை புறக்கணிக்கப்போவதாகவும் தெரிவித்தனர். சட்டமன்ற தோ்தலை புறக்கணிக்கும் வகையில் அந்த பகுதியில் கருப்பு கொடி கட்டப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.