கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு
நெல்லையில் கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
நெல்லை, மார்ச்:
நெல்லை மாநகர பகுதியில் உள்ள பேட்டை மயிலப்பபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வரதப்பன். இவருடைய மகன் வினோத்குமார் (வயது 28). இவர் ரேஷன் அரிசி கடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் மீது குடிமைபொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சிவசுப்பு ஆகியோர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.
இதை போலீஸ் கமிஷனர் அன்பு ஏற்று வினோத்குமாரை கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று வினோத்குமார், கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் வழங்கினார்கள்.