கார், மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.88 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி கார், மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சத்து 88 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.;

Update: 2021-03-23 20:38 GMT
பெரம்பலூர்:

வாகன சோதனை
சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படையினர், வேப்பந்தட்டை ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன் தலைமையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்து, விசாரணை நடத்தினர். இதில் குன்னம் பகுதியை சேர்ந்த மருதமுத்துவின் மகன் சேட்டு என்பவர், அந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 910 வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மஜாவிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
பறிமுதல்
இதேபோல் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செந்துறை தாலுகா, கட்டையன்குடிகாடு கிராமத்தில் வட்ட வழங்கல் அலுவலர் திலகவதி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி, அதில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர் அரியலூர் மாவட்டம், ராயம்புரம் கிராமத்தை சேர்ந்த சிவராஜ் ஜாட் என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி மோட்டார் சைக்கிளில் ரூ.68 ஆயிரத்து 600-ஐ எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், அதனை தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரிடம் ஒப்படைத்து, பின்னர் கருவூலத்தில் செலுத்தினர்.

மேலும் செய்திகள்