நான்கு வழி சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் விபத்து ஏற்படும் நிலை

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே நான்கு வழி சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-03-23 20:36 GMT
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே நான்கு வழி சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 
புகை மாசு ஆய்வு 
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகே வாகனங்களில் புகை மாசு ஆய்வு செய்வதற்கான பணி தனியாரிடம் விடப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இதை கண்காணிக்க வேண்டிய நிலையில் இந்த பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பணியை மேற்கொள்ள தனியார் நிறுவனத்தினர் கலெக்டர் அலுவலகம் அருகே வாகனங்களை வரிசையாக நிறுத்தி புகை மாசு சோதனை மேற்கொள்கின்றனர். 
இதனால் அந்த இடத்தில் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது. மேலும் கலெக்டர் அலுவலகத்திற்கும், வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் அதிக வாகனங்கள் வந்து செல்லும் நிலையில் அந்த இடத்தில் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. 
விதிமுறைகளுக்கு முரண் 
 விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டி வட்டார போக்குவரத்து அலுவலர்களும், சூலக்கரை போலீசாரும் அருகிலேயே இருக்கும் நிலையிலும் அவர்கள் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.
 மேலும் அதற்கு அருகிலேயே மற்றொரு நிறுவனத்தினர் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளையும் நான்கு வழிச்சாலையிலேயே மேற்கொள்கின்றனர். நான்குவழிச்சாலை என்பது வாகன போக்குவரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள நிலையில் வாகனங்களை நிறுத்தி பணிகளை மேற்கொள்வதற்காக அல்ல. இதனை உணராமல் தனியார் நிறுவனத்தினர் வாகனங்களை நிறுத்துவது விதிமுறைகளுக்கு முரணானது.
 கோரிக்கை
 எனவே வட்டார போக்குவரத்து அலுவலர்களும், சூலக்கரை போலீசாரும் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் நான்குவழிச் சாலையில் வாகனங்களை நிறுத்தும் தனியார் நிறுவனத்தினருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கி வாகனங்களை ஆய்வு செய்ய வேறு இடத்தை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இல்லையேல் கலெக்டர் அலுவலகம் அருகிலேயே விபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதாகி விடும்.

மேலும் செய்திகள்