அரசு பள்ளி கேட்டு பொதுமக்கள் போராட்டம்
காரியாபட்டி அருகே அரசு பள்ளி கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே பெரியபுளியம்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு வரை தனியார் தொண்டு நிறுவனம் மூலம் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இப்பள்ளியில் 45-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். இதையடுத்து கடந்த 8 ஆண்டுக்கு முன் பள்ளியை நடத்த முடியாமல் நிறுத்தி விட்டனர். இதையடுத்து தற்காலிக ஆசிரியர்களை வைத்து பள்ளி செயல்பட்டு வந்தது. அவர்களாலும் பள்ளியை செயல்படுத்த முடியவில்லை. அதனால் இந்த பள்ளியை தமிழக அரசு தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும் என கடந்த 8 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுகுறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இந்த பகுதியில் அரசு பள்ளி அமைக்க வேண்டும் எனவும், அவ்வாறு அமைக்கவில்லையென்றால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என வீடுகளில் கருப்புக்ெகாடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் எந்த அரசியல் கட்சியினரும் ஓட்டு கேட்டு கிராமத்திற்குள் வரவேண்டாம் என அறிவிப்பு பேனரும் வைத்துள்ளனர்.