பாளையங்கோட்டையில் ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா- தெருவுக்கு சீல் வைப்பு

பாளையங்கோட்டையில் ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள் வசிக்கும் தெருவுக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2021-03-23 20:27 GMT
நெல்லை, மார்ச்:
பாளையங்கோட்டையில் ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள் வசிக்கும் தெருவுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

கொரோனா மீண்டும் பரவல்

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதையொட்டி தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. தொடர் நடவடிக்கையாலும், பொதுமக்கள் ஒத்துழைப்பாலும் கொரோனா படிப்படியாக குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 
இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் தலை தூக்கி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் தினமும் ஒற்றைப்படை எண்ணில் இருந்த கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

4 பேருக்கு தொற்று 

நெல்லை பாளையங்கோட்டையில் நேற்று ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்குள்ள மார்க்கெட் அருகே இருக்கும் முனையாடுவார் நாயனார் தெருவில் 50 வயது மீன் வியாபாரி ஒருவர் சமீபத்தில் சென்னைக்கு சென்று திரும்பினார். அவருக்கு   பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
ேமலும் அவரது குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 பேருக்கும் தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்களும் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

தெருவுக்கு ‘சீல்’ வைப்பு

இதையடுத்து நெல்லை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அந்த தெருவுக்கு சென்றனர். அங்கு பிளீச்சிங் பவுடர் தூவி, கிருமி நாசினி தெளித்தனர். பின்னர் தெருவின் இரு பகுதியிலும் கயிறு கட்டி அடைத்தனர். 
அந்த தெருவில் கொரோனா பாதிப்பு இருப்பதை நோட்டீசாக ஒட்டி தெருவுக்கு ‘சீல்’ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் மற்றவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க கபசுர குடிநீர் வழங்கும் பணியும், சுகாதார பணிகளும் நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்