முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விவசாயி என எப்படி ஏற்று கொள்வது?
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் விவசாயி என பெருமையுடன் கூறி கொள்ளும் நிலையில் டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காதது ஏன்? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
விருதுநகர்,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் விவசாயி என பெருமையுடன் கூறி கொள்ளும் நிலையில் டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காதது ஏன்? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
அதிக இடங்களில் வெற்றி
விருதுநகரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது:-
நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கு தி.மு.க. தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைக்கப் பட்டுள்ளது. இந்த தேர்தலுக்காக மட்டும் இந்த கூட்டணி அமைக்கப்படவில்லை. தமிழக மக்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக தான் ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் போட்டியிட்டு பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது.
பா.ஜனதாவுடன் கூட்டணி
ஆனால் அ.தி.மு.க. ஜெயலலிதா அறிவித் ததற்கு முரணாக பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளது. 2016-ம் ஆண்டு ஜெயலலிதா பேசும்போது நான் என் வாழ்நாளில் ஒரு தவறு செய்துவிட்டேன். பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது நான் செய்த தவறு. இனி என் வாழ்நாளில் இது போன்ற தவறை எப்போதும் செய்ய மாட்டேன் என்று அறிவித்தார். ஆனால் அவர் மறைந்த பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளனர்.
விவசாயிகள் போராட்டம்
அதிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நான் ஜெயலலிதாவின் வாரிசு என்று கூறிக்கொள்கிறார். இந்த தொகுதியில் உள்ள அ.தி.மு.க. தொண்டர்களை கேட்கிறேன்.
நீங்கள் உண்மையில் ஜெயலலிதா மீது பற்றுள்ளவர்கள் என்றால் உங்களால் பா. ஜனதா வேட்பாளருக்கு வாக்கு கேட்க முடியுமா நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். டெல்லியில் விவசாயிகள் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடுகிறார்கள். அவர்கள் சட்டத்திருத்தத்தை ரத்து செய்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று அறிவித்துள்ளனர். ஆனால் மோடி அதற்கு செவி சாய்க்கவில்லை.
ஆட்சியில் இல்லை
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமத்தில் உள்ள விவசாயிகளும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையிலும், நான் ஒரு விவசாயி என்று பச்சை துண்டை கட்டிக்கொண்டு கூறும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி்சாமி இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்?. அப்படி என்றால் இவரை விவசாயி என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். தி.மு.க. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. ஆனால் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நீங்கள் ேதர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்களை அப்போது செய்யாதது ஏன்? இப்போது மட்டும் அறிவிப்பது ஏன்?.
தமிழ் மொழியை முழுமையாக தன்னால் கற்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது என பிரதமர் கூறுகிறார்.
தமிழ் மொழியின் மீதும் தமிழ் மக்கள் மீதும் அக்கறை இருக்கும் என்றால் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக ஆக்காமல் இருப்பது ஏன்?. நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியை ஆட்சிமொழிகளில் ஒன்றாக்கி உத்தரவிடலாமே அப்படியானால் அவரதுதமிழ் பற்று என்பது வெறும் வேடமாக தான் தெரிகிறது.
தனியார் மயம்
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. 1956-ம் ஆண்டு ரூ.100 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட எல்.ஐ.சி. நிறுவனம் தற்போது ரூ.32 லட்சம் கோடி மதிப்பிலானது.
ஆனால் எல்.ஐ.சி. நிறுவனத்தையும், பொதுக்காப்பீட்டு நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்க்க பிரதமர் மோடி துடிக்கிறார். இதனால் இந்த நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.
எனவே அனைவரும் நன்றாக வாழ தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்- அமைச்சராக உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.