ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மேய்ச்சலுக்காக கொண்டுவரப்பட்ட ஆடுகள்
சீர்காழி அருகே எடமணல் கிராமத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மேய்ச்சலுக்காக ஆடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த ஆடுகளை கொண்டு விளை நிலங்களில் கிடை அமர்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளிடம்:
சீர்காழி அருகே எடமணல் கிராமத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மேய்ச்சலுக்காக ஆடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த ஆடுகளை கொண்டு விளை நிலங்களில் கிடை அமர்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
மேய்ச்சலுக்கு ஆடுகள் வந்துள்ளன
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல், வடகால், கடவாசல், திருக்கருக்காவூர் ஆகிய பகுதிகளில் சம்பா சாகுபடி செய்த விளைநிலங்கள் அறுவடை முடிந்து தரிசாக உள்ளன. இந்த பகுதியில் மழை பெய்தால் மட்டுமே சாகுபடி செய்ய முடியும்.
இந்தநிலையில் தற்போது கோடை காலம் என்பதால் இந்த பகுதிக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான ஆடுகளை மேய்ச்சலுக்காக வந்துள்ளன. இதனை பயன்படுத்தி இந்த பகுதி விவசாயிகள் தங்கள் வயல்களில் ஆட்டுக்கிடை அமர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிடை அமர்த்தும் பணி மும்முரம்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது கொள்ளிடம் கடைமடை பகுதியான எங்கள் கிராமத்தில் நெல்லை தவிர மாற்றுப்பயிர் எதுவும் சாகுபடி செய்ய முடியாத சூழல் உள்ளது. எனவே வரும் ஆண்டு சம்பா சாகுபடிக்காக விளை நிலங்களில் ஆட்டுக்கிடை கட்டும் பணி நடந்து வருகிறது. தற்்போது ராமநாதபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காகவும், கிடை அமர்த்துவதற்காகவும் கொண்டு வந்துள்ளனர். அவற்றை பயன்படுத்தி விளை நிலத்தில் ஆட்டுக்கிடை அமத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
ஆட்டுக்கிடை அமர்த்துவதன் மூலம் ஆட்டு சாணம் மற்றும் கோமியத்தினால் விளை நிலத்தின் மண் வளம் பெறுகிறது. ஆட்டு சாணமும், கோமியமும் மண்ணுக்கு நல்ல உரமாக பயன்படுகிறது. இதனால் ரசாயன உரங்களை பயன்படுத்த தேவையில்லை. மண்ணுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இதன் மூலம் கிடைக்கும் என்பதாலும், நெல் சாகுபடி செய்தால் அதிகமான விளைச்சல் காணும் என்பதாலும் ஆட்டுக்கிடை அமர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.