நிலத்தடி நீர் குறைவதை தடுக்க தண்ணீரின் தரத்தை பாதுகாப்பது மிகவும் அவசியம்
நிலத்தடி நீர் குறைவதை தடுக்க தண்ணீரின் தரத்தை பாதுகாப்பது மிகவும் அவசியம் என்று விழாவில் முதன்மை விஞ்ஞானி பேசினார்.
ஊட்டி,
ஆண்டுதோறும் மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி இந்திய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் சார்பில், நீரின் மகத்துவம் என்ற தலைப்பில் உலக தண்ணீர் தின விழா ஊட்டி மைய அரங்கில் நடைபெற்றது.
விழாவை தமிழ்நாடு அறிவியல் சங்க நீலகிரி மாவட்ட தலைவர் ராஜூ தொடங்கி வைத்துப் பேசும்போது, இயற்கை காடுகள் முக்கியமான நீர் ஆதாரம். இதனை பேணிக்காக்கும் போது நீர் வளங்களையும் ஒன்று சேர்ந்து பாதுகாக்க முடியும்.
தென்னிந்தியாவின் தண்ணீர் தொட்டி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்ட வனங்களை பாதுகாப்பது இளைய தலைமுறையினரின் முக்கிய கடமையாகும்.
உணவுப்பொருட்கள் மற்றும் மனிதர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நாம் மிக அதிகமான நீரை பயன்படுத்துகிறோம். அதே நேரத்தில் நீரை சேமிக்கவும், சிக்கனமாக பயன்படுத்தவும் பழகிக் கொள்ள வேண்டும் என்றார்.
ஆராய்ச்சி மைய தலைவர் கண்ணன் பேசும்போது, நம் நாட்டின் நீர் வளங்களை பாதுகாப்பதும், அவற்றை சரியான முறையில் பயன்படுத்துவதும் அவசியம். இளைய தலைமுறையினர் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.
நீர்நிலைகள் பாதிப்பு
விழா ஒருங்கிணைப்பாளர் முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன் பேசும்போது, நம் முன்னோர்கள் நீரை போற்றி பாதுகாத்தனர் என்பதற்கு சங்க கால இலக்கியங்கள் சான்றாகும்.
தற்போதைய காலகட்டத்தில் பெருகிவரும் மக்கள்தொகை, வேளாண்மை மற்றும் தொழிற்சாலைகளில் நீரின் தேவை அதிகரித்து உள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் நகரமயமாதல் ஆகியவற்றால் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது.
மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் ஏற்றம் செய்தல் மற்றும் நீரின் தரத்தை பாதுகாத்தல் மிகவும் இன்றியமையாததாகும். பிளாஸ்டிக் கழிவுகளை நீர் நிலைகளில் கொட்டுவதன் காரணமாக நீலகிரியின் நிலத்தடி நீர் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படுகிறது என்றார்.
இதில் விஞ்ஞானி கஸ்தூரி திலகம் மற்றும் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.