தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடித்து அமைதியாக தேர்தல் நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர்கள் அறிவுரை வழங்கினார்கள்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடித்து அமைதியாக தேர்தல் நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர்கள் அறிவுரை வழங்கினார்கள்.
திருப்பூர்,
தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடித்து அமைதியாக தேர்தல் நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர்கள் அறிவுரை வழங்கினார்கள்.
வேட்பாளர் செலவு கணக்கு
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவினம் மற்றும் தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியான ஆணையாளர் சிவகுமார் தலைமை தாங்கினார்.
தேர்தல் பொது பார்வையாளர் மாஷீர் ஆலம், செலவின பார்வையாளர் ஷியாம் பிரசாத் காட்டிபள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை தினமும் பராமரிக்க வேண்டும். ரூ.5 ஆயிரத்துக்கு கீழ் உள்ள செலவுக்கு ரொக்கமாக பணம் கொடுக்கலாம். அதற்கு மேல் இருந்தால் வவுச்சராகவும், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் காசோலையாகவும் கொடுக்க வேண்டும். வேட்பாளர்களின் செலவு கணக்குகளை வருகிற 26-ந் தேதி, 30-ந் தேதி, 2-ந் தேதி ஆகிய நாட்கள் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் மாநகராட்சி அலுவலகத்தில் இருப்பார். அவரிடம் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம்.
11 ஆவணங்கள்
வேட்பாளரை ஆதரித்து முக்கிய பேச்சாளர்கள் பிரசாரத்துக்கு வந்தால் அதுகுறித்து முன்கூட்டியே தெரிவித்து காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும். வாக்களிக்க வருபவர்கள் அச்சமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். வாக்குச்சாவடிக்குள் வேட்பாளர் பார்வையிட அனுமதி உண்டு. அவர் அதிக நேரம் அங்கு நிற்ககூடாது. ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக தேர்தல் நடத்தும் அதிகாரி, பார்வையாளர்கள், போலீசாரிடம் புகார் தெரிவிக்கலாம். ஆன்லைன் மூலமாக, குறுஞ்செய்தி மூலமாக புகார் செய்ய வசதி உள்ளது.
ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம், மதுபானம் உள்ளிட்டவற்றை கொடுக்கக்கூடாது. அவ்வாறு புகார் வந்து தேர்தல் விதிமீறல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் தகுதியிழப்பு செய்யப்படுவார்கள். வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டு வழங்கப்படும். அதில் புகைப்படம் இருக்காது.
அதை கொண்டுவந்து வாக்குச்சாவடிகளில் கொடுத்தால் பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றை எளிதில் கண்டறிய முடியும். வாக்காளர்கள் அடையாள அட்டை அல்லது 11 ஆவணங்களை வைத்து வாக்களிக்க முடியும். வாக்காளர் சீட்டை மட்டும் வைத்து வாக்களிக்க முடியாது. கொரோனா பரவல் காரணமாக முககவசம், கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். வாக்குச்சாவடிகளில் கூட்டம் கூடக்கூடாது. அதுபோல் வாக்களித்து விட்டு வாக்காளர்கள் பொது வீதியில் கூடாமல் வீட்டுக்கு செல்ல வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடித்து அமைதியாக தேர்தல் நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
வாக்குச்சாவடிகள் பட்டியல்
வேட்பாளர்கள் தரப்பில், வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடப்பதால் வாக்குச்சாவடிகளுக்குள் மின்விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்துள்ள பகுதியில் மின்விளக்கு இருந்தால் தான் வயதானவர்கள் சின்னத்தை பார்த்து வாக்களிக்க முடியும் என்றனர். அதற்கு ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில், தெற்கு தொகுதியின் 401 வாக்குச்சாவடிகள் கொண்ட பட்டியல் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான கையேடு ஆகியவை வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.