மைவாடி பகுதியில் நான்கு வழிச்சாலைக்காக பாலம் கட்டும் பணி தீவிரம்
மைவாடி பகுதியில் நான்கு வழிச்சாலைக்காக பாலம் கட்டும் பணி தீவிரம்
மடத்துக்குளம், மார்ச்.24-
மடத்துக்குளம் அருகே மைவாடி ஊராட்சியில், மைவாடி-மடத்துக்குளம் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலை மையப்பகுதியில் 4 வழிச்சாலை அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து 4 வழிச்சாலை கண்காணிப்பு அலுவலர்கள் கூறியதாவது:- மடத்துக்குளம்- மைவாடி 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் மடத்துக்குளம் பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, நடந்து வருகிறது. இந்த 4 வழிச்சாலை பொள்ளாச்சி பகுதியில் தொடங்கி உடுமலை, மைவாடி, கழுகரை ஆகிய பகுதிகள் வழியாக திண்டுக்கல் மாவட்ட எல்லையான புஷ்பத்தூர் மற்றும் பிற கிராம சாலை வரை நீண்டுகொண்டே செல்கிறது. தற்போது மடத்துக்குளம் பகுதிக்குட்பட்ட மைவாடி ஊராட்சி மையப்பகுதியில் அமைந்துள்ள இடத்தில் 4 வழிச்சாலையின் முக்கிய மேம்பாலம் மற்றும் தரைப்பாலம் 2-ம் அமைப்பதற்கான கம்பி வேலைகள் நடைபெற்று வருகிறது. மேலும் பாலம் கட்டுவதற்கான கம்பி வேலைகள் முற்றிலுமாக நடைபெற்று, முடிந்தபின்னர், பலத்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள், மாற்று வழிப்பாதை, மற்றும் முறையான சாலை விதிமுறைகளோடு, பாலம் கட்டும் பணிகள் நடைபெறும். மேலும் பொதுமக்களுக்கு எந்த வகையிலும் இடையூறுகள் இன்றி பாலம் கட்டும் பணிகள் நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார். எனவே மடத்துக்குளம் பகுதி மக்களின் நீண்டகால கனவான 4 வழிச்சாலை மற்றும் அழகிய, அகலமான தரைப்பாலம், மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணி, தற்போது மைவாடி பகுதியில் வேகமெடுத்துள்ளதால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.