ஊட்டி வாக்கு எண்ணும் மையத்தை தயார் செய்யும் பணி தீவிரம்

வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்க ஊட்டி வாக்கு எண்ணும் மையத்தை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2021-03-23 17:49 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 762 ஆண் வாக்காளர்கள், 3 லட்சத்து 3 ஆயிரத்து 270 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் என மொத்தம் 5 லட்சத்து 85 ஆயிரத்து 49 பேர் உள்ளனர். 

ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குச்சாவடிகள், கூடலூர் தொகுதியில் 280 வாக்குச்சாவடிகள், குன்னூர் தொகுதியில் 280 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 868 வாக்குச்சாவடிகள் உள்ளன. 

இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்கவும், வாக்கு எண்ணிக்கை நடத்தவும் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 

கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்கினை உறுதி செய்யும் எந்திரங்கள் வைக்கும் அறை, வாக்கு எண்ணும் அறை என தனித்தனியாக தலா 2 அறைகள் என மொத்தம் 6 அறை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த அறையில் ஏஜெண்டுகள் வாக்கு எண்ணிக்கையை நேரடியாக பார்க்கும் வகையில், குறிப்பிட்ட இடைவெளியில் கம்புகள் வைத்து வலை பொருத்தப்பட்டு உள்ளது.

தகரம் கொண்டு மூடல்

அறையில் போதுமான வெளிச்சம் இருப்பதற்காக மின்விளக்குகள் கூடுதலாக பொருத்தப்படுகிறது. அறைக்குள் செல்ல ஒரு வழி மட்டும் இருப்பதற்காக மற்ற கதவுகள், ஜன்னல்கள் தகரம் கொண்டு மூடப்பட்டு உள்ளன. 

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்க போலீசார் பணியில் ஈடுபட உள்ளதால் வாக்கு எண்ணும் மையத்தில் 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட உள்ளது. மேலும் தபால் வாக்குகளை எண்ணுவதற்கு என்று தனியாக அறை ஒதுக்கப்படுகிறது.

தொகுதிகள் வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்களை வரிசையாக அடுக்கி வைக்க தரையில் வர்ணம் பூசி கட்டம் போடப்பட்டு வரிசை எண் குறிக்கப்பட்டு உள்ளது. மீடியா அறை, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறை வர்ணம் பூசி தயார் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த பணி முடிந்த பின்னர் வாக்கு எண்ணும் 3 அறைகளில் தலா 14 மேஜைகள் போடப்படுகிறது. இந்த தகவலை தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்