திண்டிவனம், விக்கிரவாண்டியில் வங்கி ஊழியர், மீன் வியாபாரியிடம் ரூ.1½ லட்சம் பறிமுதல்- தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
திண்டிவனம், விக்கிரவாண்டியில் வங்கி ஊழியர், மீன்வியாபாரியிடம் இருந்து ரூ. 1½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்,
திண்டிவனம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையிலான குழுவினர் நேற்று காலை மரக்காணம் அருகே ஆலத்தூர் கூட்டுசாலை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை அதிகாரிகள் வழிமறித்து சோதனை செய்ததில் அதில் வந்த மீன் வியாபாரியான கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 40) என்பவரிடம் ரூ.59 ஆயிரத்து 370 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மீன் வியாபாரியிடம் பணம் பறிமுதல்
இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கேரளாவில் இருந்து தான் வருவதாகவும், மரக்காணத்தில் இருந்து மீன்களை வாங்கிக்கொண்டு சென்னைக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும், மீன் வியாபாரம் சம்பந்தமாக பணம் கொண்டு வந்ததாகவும் சந்தோஷ்குமார் கூறினார்.
இருப்பினும் அதற்கான உரிய ஆவணம் ஏதும் அவரிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து திண்டிவனம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
விக்கிரவாண்டி
இதேபோல் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் நந்த கோபால கிருஷ்ணன் தலைமையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், ஏட்டுகள் கலைக்குமார், பழனியம்மாள் ஆகியோர் கொண்ட குழுவினர், விக்கிரவாண்டி அடுத்த ஆவுடையார் பட்டு மெயின் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கோலியனூர் தனியார் வங்கியில் தொடர்பு அலுவலராக பணிபுரியும் ஹரிகரசுதன் என்பவர் 1 லட்சத்து 4 ஆயிரத்து 250 ரூபாய் எடுத்து வந்திருந்தது தெரியவந்தது. அதற்கான ஆவணங்கள் குறித்து கேட்ட போது, தனது வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்த கடன் தொகையை வசூலித்து வருவதாக கூறினார்.
இதையடுத்து அதற்கான உரிய ஆவணங்களை பறக்கும் படையினர் கேட்டனர். ஆனால் அவரிடம் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து , விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் அலுவலர் அறிவுடை நம்பியிடம் ஒப்படைத்தனர்.