தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் போராட்டம்

கடமலைக்குண்டு அருகே தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-03-23 17:32 GMT
தேனி:
கோவில் கட்டும் பணி
கடமலைக்குண்டு அருகே மூலக்கடையை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 2013-ம் ஆண்டு அதே கிராமத்தில் மொட்டை மலையடிவாரத்தில் காளியம்மன் கோவில் கட்டும் பணிகளை தொடங்கினர். 

அப்போது கண்டமனூர் வனத்துறையினர் கோவில் கட்டும் பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறி பணிகளை தடுத்து நிறுத்தினர். மேலும் கோவிலை இடித்து அகற்றினர். 

இதனையடுத்து பொதுமக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடமலைக்குண்டு போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். 

தேர்தல் புறக்கணிப்பு
மேலும் அரசு பணியை செய்ய இடையூறு செய்ததாக கண்டமனூர் வனத்துறையினர் அளித்த புகாரின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் மீது கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று மூலக்கடை கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி வீடு மற்றும் கடைகளில் கருப்புக் கொடிகளை கட்டினர். 

போலீசார் பேச்சுவார்த்தை 
இதனையறிந்த கடமலைக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் மூலக்கடை கிராமத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதில் கோவில் கட்டும் பணியை கைவிட்டு போராட்டத்தை முடித்து கொண்டால் வழக்குப்பதிவு செய்யப்படாது என்று போலீசார் உறுதியளித்தனர். 

ஆனால் மூலக்கடையை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கை முடித்து வைக்க கடமலைக்குண்டு போலீசார் மற்றும் கண்டமனூர் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கூறினர். 

இதனையடுத்து வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். 

இதில் சமரசம் அடைந்த பொதுமக்கள் வீடு மற்றும் கடைகளில் கட்டியிருந்த கருப்புக் கொடிகளை அகற்றி போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்