ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்

கொரோனா பரவல் அதிகரிப்பதால் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினிகிளினிக்கில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2021-03-23 16:34 GMT
திண்டுக்கல்:
கொரோனா பரவல் அதிகரிப்பதால் ஆரம்ப சுகாதார நிலையங்களில், மினிகிளினிக்கில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 
கொரோனா பரவல் 
தமிழகத்தில் முதல்கட்டமாக அரசு மருத்துவமனைகள், வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. ஆனால், தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்களிடம் போதிய ஆர்வமும் இல்லாமல் இருந்தது. இதனால் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
அதோடு தடுப்பூசி பாதுகாப்பானது, முதியவர்கள் அனைவரும் தடுப்பூசி போடும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து விட்டது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக் ஆகியவற்றிலும் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
சுகாதார நிலையம், மினி கிளினிக் 
இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 11 அரசு மருத்துவமனைகள், 64 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. அதேபோல் மாவட்டம் முழுவதும் இயங்கும் 65 மினி கிளினிக்குகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இவற்றில் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இதற்கு ஆதார் அட்டை, பான்கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்