நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டையில் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவில் ஒவ்வொரு நாளும், வெவ்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் பக்தர்களும் அக்னிச்சட்டி, மாவிளக்கு, முளைப்பாரி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் திருவிழாவின் 10-ம் நாளான நேற்று பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தி வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து இரவு அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை நூற்றாண்டு கண்ட இந்து நாடார் உறவின்முறை காரியதரிசிகள் சுசீந்திரன், பாண்டியராஜன், ஜெயபாண்டியன், சுரேஷ்பாபு, கருமலைப்பாண்டியன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். திருவிழாவில் இன்று (புதன்கிழமை) முக்கிய நிகழ்ச்சியாக அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.