செருதூர் மீனவர்களை தாக்கி பொருட்களை பறித்து சென்ற இலங்கை மீனவர்கள்

வேதாரண்யம் அருகே செருதூர் மீனவர்களை தாக்கிய இலங்கை மீனவர்கள், பொருட்களை பறி்த்து சென்றனர். இதில் காயம் அடைந்த தமிழக மீனவர்கள் 6 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Update: 2021-03-23 15:59 GMT
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே செருதூர் மீனவர்களை தாக்கிய இலங்கை மீனவர்கள், பொருட்களை பறி்த்து சென்றனர். இதில் காயம் அடைந்த தமிழக மீனவர்கள் 6 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவருக்கு சொந்தமான படகில் அதே ஊரை சேர்ந்த கண்ணன்(வயது 41) உள்பட 6 பேர் நேற்று முன்தினம் மதியம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் அனைவரும் கோடியக்கரைக்கும், ஆறுகாட்டுத்துறைக்கும் இடையில் தென்கிழக்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் இரவு 7.45 மணி அளவில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். 
அப்போது அங்கு இரண்டு படகுகளில் இலங்கை மீனவர்கள் 15 பேர் வந்தனர். அவர்கள், கண்ணன் படகை மறித்து அவரையும், அவருடன் இருந்த மீனவர்களையும் தாக்கியதுடன், படகில் இருந்த வாக்கி டாக்கி, திசை காட்டும் கருவி உள்பட பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். 
மருத்துவமனையில் அனுமதி
இலங்கை மீனவர்கள் தாக்கியதில் கண்ணனுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. மற்ற 5 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் கண்ணன் உள்பட 6 மீனவர்களும் நேற்று காலை 5.40 மணிக்கு செருதூருக்கு வந்து சேர்ந்தனர். 
பின்னர் கண்ணன் உள்பட 6 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலில் மீன்பிடித்து ெகாண்டு இருந்த செருதூர் மீனவர்களை இலங்கை மீனவர்கள் தாக்கிய சம்பவம் நாகை மாவட்ட மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்