வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கிராமம் கிராமமாக வாக்கு சேகரிப்பு

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கிராமம் கிராமமாக சென்று வாக்குசேகரித்தார்.

Update: 2021-03-23 12:00 GMT
வாக்குசேகரிப்பு 
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைப்புலம், அவரிக்காடு, மகாராஜபுரம், உம்பளச்சேரி, மணக்குடி, காடந்தேத்தி உள்ளிட்ட  கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது வெடி, வெடித்தும், மாலை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர்கள் எங்கள் வாக்கு இரட்டை இலைக்கு என்று உறுதியளித்தனர்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்கு சேகரித்து பேசும் போது கூறியதாவது:- 

மக்கள் பணி செய்வதற்காக மதில் என்ன வேலியையும் தாண்டுவேன், அதைவிட கடலையும் தாண்டி,  உயிரைக் கொடுத்தாவது பணி செய்வேன். வேதாரண்யத்தில் 21,000 பெண்களுக்கு வேத ஆயத்த ஆடை பூங்கா மூலமாக வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும். முதல்கட்டமாக 500 பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் பகுதியில் இதுவரை ரூ.2500 கோடியில் நலத்திட்ட பணிகள் நடைபெற்று உள்ளது. 

145 பாலங்கள் 
70 ஆண்டுகளில் செய்யாத பணிகளை இந்த 5 ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் வேதாரண்யத்திற்கு செய்யப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் வடியாத பிரதான சாலையில் உள்ள குழாய் பாலங்கள் அகற்றப்பட்டு 145 இடங்களில் கல்வெட்டு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.10 கோடியில் வேதாரண்யம் வேதாமிர்த ஏரி தூர்வாரப்பட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 65 ஆண்டுகளாக ஓடாத வேதாரண்யேஸ்வரர் கோவில் தேர் இந்த ஆட்சியில் தான் முதன் முதலாக ஓடியது. வரும் ஆண்டில் மேலும் நான்கு தேர்களும் ஓடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

தேரோடும் வீதியில் ரூ.10 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.வேதாரண்யம் தாலுகாவில் தாணிக்கோட்டகம் வானங்கோட்டகம், நாகக்குடையான் போன்ற ஏரிகள் தூர்வாரப்பட்டு உள்ளது. வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் ரூ.10 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
 
துறைமுகம் அமைக்கும் பணி 
சுனாமி மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாப்பதற்காக நிரந்தரமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளப்பள்ளத்தில் ரூ.100 கோடியிலும், ஆறுகாட்டுத்துறையில் ரூ.150 கோடியிலும் படகுகளை நிலைநிறுத்துவதற்கு துறைமுகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஓரடியம்புலத்தில் ரூ.88 கோடியில் மீன்வள பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. ரூ. 658 கோடியில் அடப்பாறில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று உள்ளது.

வீட்டுமனை பட்டா
செம்போடையில் ஐ.டி.ஐ. தொடங்கப்பட்டுள்ளது. கோவில் நிலங்களில் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொண்ட ஒரே அமைச்சர் நான்தான். ஆனால் நீதிமன்ற வழக்கு நடவடிக்கையால் பட்டா வழங்க சிறிது காலதாமதம் ஆகிறது. கோர்ட்டு நடவடிக்கைகள் முடிந்தபிறகு கோவில் நிலங்களில் குடியிருந்து வருவதற்கு கண்டிப்பாக பட்டா வழங்கப்படும். இதேபோல் பல்வேறு நலத்திட்டங்கள் வேதாரண்யம் தொகுதியில் தொடர எனக்கு இரட்டை இலையில் வாக்களியுங்கள். 

இவ்வாறு அவர் கூறினர். 

மேலும் செய்திகள்