குன்றத்தூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து: வாழை இலை கட்டுகள் சரிந்து விழுந்து ஒருவர் பலி
குன்றத்தூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், வாழை இலை கட்டுகள் சரிந்து விழுந்து ஒருவர் பலியானார்.
லாரி விபத்து
தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 55), திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் தாம்பரம்-மதுரவாயல் பைபாசில் சென்று கொண்டிருந்தார்.
குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் அருகே சென்றபோது, முன்னாள் வாழை இலை கட்டுகளை ஏற்றிச் சென்ற லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்ததில், சாலையில் கவிழ்ந்தது. அப்போது கவிழ்வதற்கு முன்னதாக லாரியிலிருந்து சரிந்த வாழை இலை கட்டுகள் பழனி மீது விழுந்ததில், அவர் சாலையில் இழுத்து செல்லப்பட்டார். இதில், பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
டிரைவர் கைது
இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன பழனி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் சிவராஜ் (37), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது பின்னர் விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.