ஊத்துக்கோட்டையில் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் ரூ.2.75 லட்சம் சிக்கியது
ஊத்துக்கோட்டையில் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் ரூ.2.75 லட்சம் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள அண்ணா நகர் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய ஆவணமின்றி ரூ.2.75 லட்சம் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், காரில் வந்தவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த வெங்கடேசுலு (வயது 51), அவரது மனைவி நாகம்மாள், மகன் சிவகுமார் என்பது தெரியவந்தது. சீட்டுப்பணம் ரூ2.75 லட்சத்தை எடுத்துக்கொண்டு கும்மிடிப்பூண்டி அருகே சூரவாரிகண்டிகையில் உள்ள தனது வீட்டுக்கு செல்லும்போது அவர்கள் சென்ற நிலையில், பணம் சிக்கியதாக தெரிகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் கும்மிடிபூண்டி தொகுதி தேர்தல் அதிகாரி பாலகுருவிடம் ஒப்படைக்கப்பட்டது.