பெருங்குடியில் தனியார் மருத்துவ நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று - கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய நிறுவனத்துக்கு ‘சீல்’
பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றும் 40 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அந்த நிறுவனத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பெருங்குடியில் மருத்துவம் சார்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. மருத்துவ பொருட்களை கையாளும் விதம், வெளிநாடுகளில் இருந்து மருத்துவம் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த மையம் செயல்படுகிறது. இதன் கிளைகள் தரமணி, கந்தன்சாவடி ஆகிய இடங்களில் உள்ளன.
இந்த நிறுவனத்தில் பணியாற்றும் 4 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து இவர்களுடன் தொடர்புடைய இந்த நிறுவனத்தில் பணியாற்றும் சக ஊழியர்கள் என 364 பேருக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்தனர்.
பரிசோதனை முடிவில் இவர்களில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் கடந்த சில நாட்களாக சோர்வுடன் காணப்பட்டனர். அவர்களில் பலருக்கு சளி, இருமல், காய்ச்சல் என கொரோனா அறிகுறிகளும் தென்பட்டன.
இந்தநிலையில்தான் அவர்களில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதையடுத்து பெருங்குடி மண்டல சுகாதாரத்துறை சார்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பணிபுரியும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் நிறுவனம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்வதற்காக நிறுவனத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கும் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநககராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.