உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த ரூ.8 லட்சம் பறிமுதல்

கரூர், அரவக்குறிச்சியில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த ரூ.8 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.;

Update: 2021-03-23 05:00 GMT
கரூர்,

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ேதர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் துணை ராணுவம், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் ஒருபகுதியாக கரூர் சட்டமன்ற தொகுதியின் நிலையான கண்காணிப்பு அதிகாரி தமிழ்செல்வி தலைமையிலான குழுவினர் நேற்றுமுன்தினம் இரவு கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வாங்கல் போலீஸ் நிலையம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.     
 
அப்போது அந்த வழியாக வந்த நாமக்கல் மாவட்டம், ஆரியூர் கிராமத்தை சேர்ந்த ஒரு முட்டைப்பண்ணை நிறுவனத்திற்கு சொந்தமான லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.  அப்போது அதில் நாமக்கல் மாவட்டம், செல்லப்பம்பட்டியை சேர்ந்த அர்ஜூனன் என்பவர் ரூ.5 லட்சத்து 51 ஆயிரத்து 300-ஐ உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது தெரியவந்தது. 
இதனையடுத்து அந்த பணம் நிலையான கண்காணிப்பு குழுவினரால் கைப்பற்றப்பட்டு, கரூர் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியனிடம் ஒப்படைக்கப்பட்டது. 

அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி அண்ணாநகரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பிரகாஷ் தலைமையில் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கரூர் நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி அந்த குழுவினர் சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் இருந்த கரூர் ராமானுஜம் நகரை சேர்ந்த விவேக் (வயது 29), கரூர் நன்னியூரை சேர்ந்த செல்வராஜ் (44) ஆகியோர் சேர்ந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்து 250 கொண்டு வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அந்த பணத்திற்கான ஆவணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அதற்கான ஆவணம் அவர்களிடம் இல்லை. இதையடுத்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்து 250-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து, அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் தவசெல்வத்திடம் ஒப்படைத்தனர்.  கரூர், அரவக்குறிச்சி பகுதியில் மொத்தம் ரூ.8 லட்சத்து 10 ஆயிரத்து 250 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்