மக்களுக்காக 24 மணி நேரமும் உழைப்பேன் - அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம்
மக்களுக்காக 24 மணி நேரமும் உழைப்பேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.;
அன்னவாசல்,
விராலிமலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று அன்னவாசல் ஒன்றியம் திருநல்லூர், மேலக்களம், கலர்ப்பட்டி, சேதுராப்பட்டி, பாப்பாவயல், சின்னகுறும்பட்டி, சீகன்வயல், மாத்திரம்பட்டி, பூனைக்குத்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
விஜயபாஸ்கர் உங்கள் பிள்ளை. எந்த காலத்திலும் எல்லா பிரச்சினைகளுக்கும், எந்த அவசரத்திற்கும் இந்த விஜயபாஸ்கர் என்ற பிள்ளை உங்களோடு இருப்பேன். ஊருக்கு வெளியே காவல் காக்கும் தெய்வமான கருப்பசாமி போல் உங்களை காக்க எல்லா காலங்களிலும் உங்கள் பிள்ளையாக நான் இருக்கிறேன்.
தென்னலூரில் பலகோடி மதிப்பீட்டில் பாலம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. சாதி, மதம், மொழி பார்க்கமாட்டேன். நான் உங்களிடம் அமைச்சராக வரவில்லை, உங்கள் வீட்டு பிள்ளையாக இங்கு வந்துள்ளேன். எனக்கு ஒன்றே ஒன்றுதான் தெரியும், 24 மணிநேரம் உழைக்க தெரியும், கஷ்டப்பட தெரியும், நல்ல பல திட்டங்களை கொண்டுவந்து சேர்க்க தெரியும். ஆகவே எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை இந்த தொகுதி மக்களுக்காக உழைத்துக்கொண்டே இருப்பேன்.
விராலிமலை மேற்கு பகுதியில் கட்டுக்கோப்பான எல்லா சமூதாயத்தினரும் வாழ்ந்து வரும் ஒரு அமைதி பூங்காவாக விளங்கி கொண்டிருக்கிறது. எந்த சூழ்நிலையிலையிலும் உதய சூரியனுக்கு வாக்களித்தால் அராஜகம், அட்டூழியம், கட்டப்பஞ்சாயத்து ஆகியவை நடக்கும். ஊர் அமைதியாக இருக்கவும், விராலிமலை சட்டமன்றத் தொகுதி தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ்ந்திடவும், நாடு செழிப்பாக இருக்கவும் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாரம் செய்ய சென்ற இடங்களில் விஜயபாஸ்கருக்கு பெண்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சிறுவர்கள் நடனமாடி வரவேற்றனர்.