தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியத்தில் தி.மு.க. வேட்பாளர் அர.சக்கரபாணி கிராமம், கிராமமாக தீவிர வாக்கு சேகரிப்பு

தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியத்தில் ஒட்டன்சத்திரம் தி.மு.க. வேட்பாளர் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. கிராமம் கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரித்தார்.

Update: 2021-03-23 04:06 GMT
ஒட்டன்சத்திரம்,

ஒட்டன்சத்திரம் தொகுதி தி.மு.க. வேடபாளர் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள மார்க்கண்டபுரம், மீனாட்சிவலசு, மட்டப்பாறை, கே.டி.பாளையம், கூத்தம்பூண்டி, சின்னவேடம்பட்டி, கரியாம்பட்டி, நாச்சியப்பகவுண்டன்வலசு, அப்பியம்பட்டி, பாலப்பம்பட்டி, ஆத்தூர், வடபருத்தியூர், புங்கமுத்தூர், சின்னவேடம்பட்டி, சண்முக வலசு என கிராமம், கிராமமாக சென்று உதயசூரியன் சின்னத்துக்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். 

அப்போது பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்த பிரசாரத்தின்போது அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

ஒட்டன்சத்திரத்தில் தொடர்ந்து 5 முறை என்னை வெற்றி பெற செய்து இருக்கிறீர்கள். அதற்கு கோடானுகோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது 6&வது முறையாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்னை இங்கு வேட்பாளராக நிறுத்தியுள்ளார். எனக்கு கடந்த முறை ஆதரவு தந்து வெற்றி பெற செய்தது போல் இந்த முறையும் தொடர்ந்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

கடந்த காலத்தில் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் அமராவதி, சண்முகநதி இணையும் கூட்டயாற்றின் முனையிலிருந்து ரூ.1.50 கோடி செலவில் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆழியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து சுமார் ரூ.150 கோடி செலவில் குடிநீர்திட்டம் நிறைவேற்றப்பட்டது. அமராவதி ஆற்றில் இருந்து ஆழ்துளை கிணறு மூலம் சுமார் ரூ.15 லட்சம் செலவில் குருவன்வலசு, கொக்கரக்கள்வலசுக்கு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. தாழையூத்து முதல் தாடிக்கொம்பு வரை சாலை அமைக்கப்பட்டது. பழனி புளியம்பட்டி முதல் வடபருத்தியூர் வரை சாலை அமைக்கப்பட்டது. பழனி முதல் மானூர் வழியாக தாராபுரத்துக்கு சாலை அமைக்கப்பட்டது. 

ஒட்டன்சத்திரம் ஒன்றியம், தொப்பம்பட்டி ஒன்றியம், ஒட்டன்சத்திரம் நகரம், கீரனூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் மக்கள் தொகை அடிப்படையில் புதிய நியாயவிலைக் கடைகள், பகுதிநேர நியாய விலை கடைகள் அனைத்துக்கும் பாதுகாப்பான புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டது கள்ளிமந்தையம் ஊராட்சியில் புதிய பத்திரப்பதிவு அலுவலகம் அமைத்து அதற்கு சொந்த கட்டிட வசதி செய்து கொடுக்கப்பட்டது. கள்ளிமந்தையம் கால்நடை மருந்தகம் கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இது போன்ற எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். வருங்காலத்தில் மீண்டும் என்னை வெற்றி பெறச்செய்யுங்கள்.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஒட்டன்சத்திரம் தொகுதியில் விட்டுப்போன அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி தருவேன். நமது பகுதிக்கு அரசு கலைக்கல்லூரி, மருத்துவக்கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் அமைத்து கொடுப்பேன். ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள  அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி, சாக்கடை வசதி, குடிநீர் வசதி  போன்ற அடிப்படை வசதிகளை குறைவின்றி நிறைவேற்றுவேன். 

தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாணவர்களுக்கும், பெண்களுக்கும் விளையாட்டு மைதானம் அமைத்து தருவேன். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதியின்பேரில் அனைத்து பெண்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும். மின் இணைப்பு வேண்டி மனு கொடுத்த அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்படும். ஒட்டன்சத்திரம் தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு ரூ.530 கோடி செலவில் திட்டம் தயார் செய்யப்பட்டு ஆட்சி அமைந்தவுடன் வேலை தொடங்கப்படும். அனைத்து மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்திட எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.. இவ்வாறு அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. பேசினார்.

இந்த பிரசாரத்தின்போது தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்