திருச்சி நாடார் உறவின்முறை சங்கத்தினர் தி.மு.க.விற்கு ஆதரவு - சமுதாய முன்னேற்றத்திற்கு துணையாக இருப்பேன் என்று கே.என்.நேரு பேச்சு
திருச்சி நாடார் உறவின்முறை சங்கத்தினர் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது நாடார் சமுதாயத்திற்கு என்றென்றும் துணையாக இருப்பேன் என்று கே.என்.நேரு பேசினார்.
திருச்சி,
திருச்சியில் நாடார் உறவினர் முறை சங்கத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு கலந்து கொண்டார். கூட்டத்தில் நாடார் உறவினர் முறை சங்கத்தினர், தி.மு.க. முதன்மை செயலாளரும், மேற்கு தொகுதி வேட்பாளருமான கே.என்.நேருவிற்கு தங்களது முழு ஆதரவை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றினர். கூட்டத்தில், பாலாஜி சுப்பிரமணியன் நாடார், மணி நாடார், சண்முகதுரை நாடார், வக்கீல் சிவா நாடார், சரவணன் நாடார், போஸ் செல்வகுமார் நாடார், திருமணி நாடார் மற்றும் ஏராளமான நாடார் சமுதாயத்தினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கே.என்.நேரு பேசியதாவது:-
ஒவ்வொரு முறையும், தேர்தல் வரும் நேரங்களில் எல்லாம் திருச்சியில் உள்ள நாடார் உறவின்முறை சங்கத்தினர் என்னை அழைத்து உங்களுடைய ஆதரவை எனக்கு அளித்து வருகிறீர்கள். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களுக்கும், உங்களுடைய சமுதாயத்தினர் முன்னேற்றத்திற்கும் நான் என்றென்றும் துணையாக இருப்பேன். நானும் ஒரு வியாபாரி தான். தென் மாவட்டத்தில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் எனக்கு நிறைய நாடார் நண்பர்கள் உண்டு. பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து அவருக்கு பெருமை செய்தவர் கலைஞர் கருணாநிதிதான். உழைப்பால் உயர்ந்து வரும் நாடார்களின் வளர்ச்சிக்கு என்றும் நான் உதவிகரமாக இருப்பேன்.இவ்வாறு அவர் பேசினார்.