ராஜபாளையம் தொகுதியில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் முதியோர் பென்சன் வாங்கி கொடுப்பேன் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
ராஜபாளையம் தொகுதியில் தனியாக முகாம் நடத்தப்பட்டு மனுக்கள் வாங்கி தகுதி வாய்ந்த அனைவருக்கும் முதியேர் பென்சன் வாங்கி கொடுப்பேன் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதியில் அதிமுக சார்பாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றார். நேற்று சேத்தூர் அரசரடி பஸ் ஸ்டாப், எக்காலதேவி அம்மன் கோவில், ஐந்து கடை பஜார் பகுதி, மேட்டுப்பட்டி கூட்டுறவு பேங்க் முக்கு, சாமிதேவர் முக்கு, மேட்டுப்பட்டி பிள்ளையார் கோவில், செட்டியார்பட்டி மாடசாமி கோவில் சாங்ஸ்ன், புனல்வேலி பேருந்து நிலையம்,செட்டியார்பட்டி 6 சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காய்கறி மார்க்கெட், நடுமாரியம்மன் கோவில் மைதானம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தேர்தல் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.சேத்தூர் பேரூராட்சியில் ஜீவாநகர் பகுதியில் டுலரில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.தொடர்ந்து அங்குள்ள முகைதீன் ஆண்டகை ஹனபி ஜிம்மா பள்ளி வாசலில் இஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் வாக்கு சேகரித்தார்.
தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் பேசும்போது, ராஜபாளையம் தொகுதி முழுவதிலும் கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான வளர்ச்சி திட்டப்பணிகளை செய்து கொடுத்துள்ளேன். ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம்,ரயில்வே மேம்பாலம் உட்பட ஏராளமான பணிகளை செய்து கொடுத்துள்ளேன்.ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் இரண்டு கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்துள்ளேன்.தொடர்ந்து இந்த தொகுதியில் தங்கி மேலும் பல திட்டங்களை கொண்டு வருவேன்.
செட்டியார்பட்டி,சேத்தூர் பேருராட்சிகளை நகராட்சியாக தரம் உயத்த நடவடிக்கை எடுப்பேன்.செட்டியபட்டி பேருராட்சியில் 15 ஆயிரம் வாக்காளர்கள் கொண்ட பேரூராட்சியாகும். செட்டியார்பட்டி, முகவூர், தளவாய்புரம் போன்ற பகுதிகளை இணைத்து நகராட்சியாக மாற்றினால்தான் ஏராளமான திட்டங்கள் வரும்.96ல் திருத்தங்கல் பேரூராட்சியை நான் பதவிக்கு வந்த பிறகுதான் 98ல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.நீங்கள் கொடுக்கும் மனுக்களை ஒரு மாதத்தில் அல்லது இரண்டு மாதத்தில் தீர்த்து வைக்க முயற்சி எடுப்பேன்.
செட்டியார்பட்டி ஒரு தொழில் நகரமாகும். தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக செட்டியார்பட்டி உள்ளது.தொழிலாளர்களுக்கு தேவையான ஊதியம் தொழிற்சாலைகள் உரிமையாளருடன் பேசி ஊதிய உயர்வு உட்பட சலுகைகளைப் பெற்று தருவேன். ராஜபாளையம் தொகுதியில் என்னை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றுவேன். ராஜபாளையம் தொகுதியில் ஏராளமான ஆலயங்கள் உள்ளன. இந்த ஆலயங்கள் முன்பு சோலார் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் விரைவில் முடிக்கும் வகையில் பணிகள் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. 2மாத காலத்தில் பணிகள் முடிவடைந்து விடும். செட்டியார்பட்டியிலும் சேத்தூரிலும் தனியாக அலுவலகம் அமைத்து பொதுமக்களின் குறைகளை கேட்பேன்.ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் ஒவ்வொறு பகுதிகளிலும் முகாம் நடத்தப்பட்டு அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வாங்கி கொடுப்பேன்.
ஏராளமான முதியவர்கள் முறைப்படி மனு கொடுக்காததால் அவர்களுக்கு முதியோர் பென்சன் கிடைக்காமல் போகின்றது. எனவே இதற்காக தனியாகவே முகாம்கள் நடத்தி மனுக்கள் வாங்கி ஆன்லைனில் பதிவேற்றப்பட்டு மனு கொடுத்த அனைவருக்கும் முதியோர் பென்ஷன் வாங்கிக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். 20 ஆயிரம் நபர்களுக்கு மட்டும் முதியோர் பென்சன் வாங்கி கொடுக்கப்பட்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் விருதுநகர் மாவட்டத்தில் 48ஆயிரம் முதியவர்களுக்கு பென்ஷன் வாங்கிக் கொடுத்துள்ளேன்.
வெற்றி பெற்ற பின்பு கட்சி பார்க்க மாட்டேன்,எனக்கு ஓட்டு போடவில்லை என்று எண்ண மாட்டேன், எல்லோரையும் ஒன்றாக பாவித்து பணியாற்றுவேன்.தொகுதியில் உங்கள் வீட்டுப் பிள்ளையாக உங்கள் வீட்டு சகோதரனாக நான் வேலை பார்ப்பேன்.நீங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் கே.டி.ராஜேந்திரபாலாஜி 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற வரலாற்றை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று பேசினார்.பிரச்சாரத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.