பேச்சிப்பாறையில் படகில் சென்று மலைவாழ் மக்களிடம் வாக்கு சேகரித்த விஜய் வசந்த் - அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி

பேச்சிப்பாறை பகுதியில் படகில் சென்று மலைவாழ் மக்களிடம் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் வாக்கு சேகரித்தார். அப்போது, அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார்.

Update: 2021-03-23 02:44 GMT
நாகர்கோவில், 

தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் விஜயகுமார் என்ற விஜய்வசந்த் போட்டியிடுகிறார். இவர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் சமுதாய தலைவர்களையும் நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு கேட்டார். அந்த வகையில் திருவட்டார் பகுதியில் உள்ள மலவிளை ஆதிபெந்தகொஸ்தே சத்திய சபையின் பாஸ்டர் ஆன்டனி ஷிபு ஜோயலை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். மேலும் தக்கலையில் உள்ள குமரி மாவட்ட ஜமா அத்துல் உலமா தலைவர் அபுசாலிக் பாசில் பாகவியை சந்தித்து ஆதரவு கோரினார்.

இந்த நிலையில் நேற்று பேச்சிப்பாறை மலை பகுதிகளில் வசித்து வரும் மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். அந்த பகுதிக்கு செல்ல வழிப்பாதை வசதி கிடையாது. அணை வழியாக படகு மூலமாக தான் செல்ல வேண்டும்.

எனவே விஜய்வசந்த் படகு மூலமாக மலைவாழ் மக்கள் வசிக்கும் இடத்துக்கு சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது விஜய்வசந்துக்கு பலா பழத்தை அவர்கள் அன்பளிப்பாக கொடுத்து வரவேற்றனர். அதோடு தங்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தரும்படியும் கேட்டனர். அதற்கு தான் வெற்றி பெற்றதும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். முன்னதாக விஜய்வசந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதா வேட்பாளரான பொன்.ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரிக்கும் போது ஒரு கருத்தை கூறினார். அதாவது சரக்கு பெட்டக துறைமுகம் கன்னியாகுமரியில் வராது என்றும், தூத்துக்குடியில் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பணிகள் தொடங்க பிரதமர் மோடி ஆணையிட்டுள்ளதாகவும் பேசியுள்ளார். ஆனால் இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?. ஏற்கனவே தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து டெண்டர் விடப்பட்டு உள்ளது. அதில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைவது தொடர்பாக தெளிவாக கூறப்பட்டுள்ளது.

மீனவர்களின் வாழ்வாதாரத்தையே அழிக்கக்கூடிய துறைமுகத்தை கொண்டுவருவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அந்த திட்டம் தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டுவிட்டது என்று கூறுகிறார்கள். அது உண்மையாக இருந்தால் ஏன் அறிக்கையாக விடவில்லை?. எனவே பா.ஜனதா பொய் பிரசாரம் செய்து அரசியல் நாடகம் ஆடுகிறது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் மக்களை பாதிக்கும் திட்டங்களை வர விடமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்