தேர்தல் விதிமுறைகளை மீறிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தி.மு.க.வினர் மனு

தேர்தல் விதிமுறைகளை மீறிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க.வினர் மனு அளித்துள்ளனர்.

Update: 2021-03-22 23:48 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி வைத்திநாதனிடம், தி.மு.க.வினர் நேற்று ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நெகமம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் கொண்ட வாட்ஸ்-அப் குழு ஒன்றை நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் குரூப் அட்மினாக இருந்து குழுவில் பதிவிடப்படும் தகவல்களை சரிபார்த்து வந்தனர். 

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் கிரிகதிர்வேல் என்பவர் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், குழுவில் அ.தி.மு.க.வினர் அவர்கள் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருவதால், அதிகாரிகளாகிய நீங்கள் உடந்தையாக இருக்க கூடாது என்று கூறியுள்ளார். 

ஆனால் இன்ஸ்பெக்டரும், சப்-இன்ஸ்பெக்டரும் தி.மு.க.வினருக்கு எதிராக பதிவு செய்யும் பதிவுகளை பார்த்தும் நடவடிக்கை எடுக்காமல் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்துள்ளனர். 

வாட்ஸ்-அப் குழுவில் குரூப் அட்மினாக இருந்து கொண்டு அ.தி.மு.க.வினருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானதாகும். 
எனவே 2 போலீஸ் அதிகாரிகளையும் உடனடியாக இடமாற்றம் செய்தால் தான் ஜனநாயக முறைப்படி பொதுமக்கள் வாக்களிக்க முடியும். 

மேலும் நெகமம் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரது செல்போன்களை கைப்பற்றி, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்