நெகமம் அருகே பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண்
நெகமம் அருகே பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் மர்மமான முறையில் ஆண் இறந்து கிடந்தார்.
நெகமம்,
நெகமத்தை அடுத்த குளத்துப்பாளையத்தில் பி.ஏ.பி. கிளை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் 10 அடி ஆழம் கொண்டது. தற்போது இந்த வாய்க்காலில் குறைந்த அளவே தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் குளத்துப்பாளையம் அருகே விஷ்ணுராஜ், தாமோதரன் ஆகியோர் தோப்பிற்கு அருகே வாய்க்காலில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் தேவணாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் பாலதண்டாயுதபாணி மற்றும் நெகமம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் ஆண் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்து கிடந்தவர் யார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.