ஆட்டோ கவிழ்ந்து பெண்கள் உள்பட 5 பேர் படுகாயம்

கூடலூரில் ஆட்டோ கவிழ்ந்து பெண்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-03-22 23:23 GMT
கூடலூர்,

கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமப்புறங்களுக்கு பஸ் வசதி சரிவர கிடையாது. இதனால் ஆட்டோக்கள், ஜீப்புகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட லாரஸ்டன் பகுதியை சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு ஆட்டோவில் கூடலூர் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். ஆட்டோவை லாரஸ்டன் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(வயது 28) என்பவர் ஓட்டினார். 

நடுக்கூடலூரில் இருந்து கோத்தர்வயல் செல்லும் பள்ளத்தாக்கான சாலையில் சென்றபோது திடீரென ஆட்டோ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோர சுவரில் மோதி ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த காளிதாஸ் மனைவி தெய்வமணி (34). கந்தையா மனைவி ராஜமணி (58), சோமராஜி (51), கவிக்குமார் (52), டிரைவர் மணிகண்டன் (28) ஆகிய 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, படுகாயம் அடைந்த 5 பேரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.  பின்னர் மேல் சிகிச்சைக்காக டிரைவர் மணிகண்டன், ராஜமணி, கவிக்குமார் ஆகியோர் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்