கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் சென்னிமலை முருகன் கோவிலில் இந்த ஆண்டு பங்குனி உத்திர தேேராட்டம் நடைபெறுமா? என்று பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2021-03-22 22:30 GMT
கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் சென்னிமலை முருகன் கோவிலில் இந்த ஆண்டு பங்குனி உத்திர தேேராட்டம் நடைபெறுமா? என்று பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஊரடங்கால் ரத்து
சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச நாளன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். அதேபோல் பங்குனி உத்திர தேரோட்டமும் சிறப்பாக நடைபெறும்.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும் தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் சில மாதங்கள் மூடப்பட்டு பின்னர் படிப்படியாக சில தளர்வுகளுடன் திறக்க அரசு அனுமதி அளித்தது.
கட்டுப்பாடுகளுடன் தேரோட்டம்
எனினும் கடந்த தைப்பூச திருவிழாவின் போது கொரோனா காரணமாக சென்னிமலை முருகன் கோவிலில் தேரோட்டம் நடைபெறாது என முதலில் அறிவிக்கப்பட்டது. இதனால் பக்தர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் தேரோட்டத்தை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவனிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேரோட்டத்தை நடத்த கலெக்டர் அனுமதி அளித்தார். அதன்பேரில் கடந்த ஜனவரி 28-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது.
அறிவிப்பு வெளியிடவில்லை
இந்த ஆண்டு வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பங்குனி உத்திர திருநாள் வருகிறது. ஆனால் நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது.
கொரோனா பாதிப்பு காரணமாகத்தான் இந்த ஆண்டும் சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நடத்துவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை என கூறப்படுகிறது. விழாவுக்கான அழைப்பிதழும் இதுவரை அச்சடிக்கப்படவில்லை.
பக்தர்கள் எதிர்பார்ப்பு
கொரோனா பரவலால் 9, 10, 11-ம் வகுப்புகளுக்கு அரசு மீண்டும் விடுமுறை அளித்துள்ளது. ஆனால் பங்குனி உத்திர தேரோட்டத்துக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேரோட்டம் நடத்துவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வராததால் முருக பக்தர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பங்குனி உத்திர தேரோட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் தேரோட்டம் குறித்து எந்த அறிவிப்பும் வராததால் இந்த ஆண்டும் ரத்து செய்யப்படுமோ என கவலையில் உள்ளோம். அரசு உடனடியாக நல்ல முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்’ என்றனர்.

மேலும் செய்திகள்